கரூர் பெருந்துயரம் - 10 எஸ்.ஐ.க்களிடம் சிபிஐ விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டநிலையில், 7 காவல் உதவி ஆய்வாளர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக எஸ்ஐடி குழுவிடமிருந்து ஆவணங்களை பெற்ற சிபிஐ அதிகாரிகள் அதுதொடர்பான விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் 3D டிஜிட்டல் ஸ்கேனர் உதவியுடன் அளவீடு செய்யும் பணியை நடத்தினர். இதனை தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு சம்மன் அனுப்பி இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 12 காவலர்கள் கரூர் சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களுக்கும் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தநிலையில் தற்போது 7 காவல் உதவி ஆய்வாளர்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜாராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

Night
Day