கோவை கூட்டு பாலியல் - 3 பேர் சுட்டுப் பிடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த 3 பேர் காரில் இருவர் இருப்பதை அறிந்தனர். காரின் கதவை திறக்குமாறு மிரட்டியதில், அவர்கள் பயந்து கதவை திறக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து, ஆண்நண்பருடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்து, ஆண் நண்பர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டனர். 

இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கும்பலை திவீரமாக தேடிவந்த நிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குணா தவசி, சதீஷ் கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர். 

முதற் கட்ட விசாரணையில், மூன்று பேரும் சிவகங்கையை சேர்ந்தவர்கள் என்பதும் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், 3 பேர் மீதும் கொலை வழக்கு, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியபட்டது.

இதனிடையே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள் சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் படிந்துள்ள ரத்தக் கரைகள் சேகரிக்கப்பட்டன. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் நிறுத்தப்பட்டு யாரையும் அனுமதிக்காமல் கண்காணித்தனர்.


Night
Day