அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது - தலைமறைவாக உள்ளவர்களுக்கு போலீசார் வலை வீச்சு

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வடுகம்பட்டியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் சென்ற கார் மீது அக்கட்சியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கொலை வெறித் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த பல நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும், பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகியின் துக்க நிகழ்விற்கு சென்று விட்டு நேற்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கட்சியின் மற்றொரு தரப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அருள் வந்த கார் மீதும், அவரது ஆதரவாளர்களின் கார் மீதும் கற்களை வீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். 

இதுகுறித்து, ஆதரவாளர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் அருள் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், எஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் கைது செய்து நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

Night
Day