எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஜித் மரண வழக்கில் புகார்தாரரான நிகிதா மீது பணமோசடி உள்ளிட்ட புகார்கள் உள்ள நிலையில், தங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக மாணவிகள் ஆட்சியரிடம் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் புகார்தாரரான பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பணமோசடி புகார்களின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
15 ஆண்டுகளுக்கு முன் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம், பல லட்ச ரூபாயை சுருட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகிதா மீது மாணவிகளும் கடந்த வருடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பேராசிரியை நிகிதா தங்களை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும், தொடர்ந்து தங்களை வார்த்தைகளால் வசைப்பாடியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். நிகிதாவால் தங்களது படிப்பு கேள்விக்குறியாக உள்ளதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
நிகிதா மீது பண மோசடி, நகை மோசடி என அடுத்தடுத்து புகார்கள் எழும்நிலையில், தற்போது மாணவிகளின் புகாரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணைக்கு பயந்து நிகிதா தலைமறைவாக உள்ளதாக கூறப்படும்நிலையில், அவரைப் பிடித்து விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வேலை மோசடி, நகை திருட்டு புகாரின் உண்மை தன்மை ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.