எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர் நீண்ட நாள் தேடுதலுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கைது செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டியில் கடந்த 12ம் தேதி 10 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார், கடந்த 14 நாட்களாக குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் அணிந்திருந்த அதே நிறத்திலான டீசர்ட்டை அணிந்துக்கொண்டு, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் சுற்றித்திரிவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காண்பித்து போலீசார் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல்நிலையம் முன்பாக சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்க ஆரம்பாக்கம் காவல்நிலையம் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
சிறுமி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேசிய ஐஜி, சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் 30 வயது உடைய நபர் என்று தெரிவித்துள்ளார். உருவ அமைப்பு, அவருடைய பெயர் போன்றவற்றை உறுதி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக தெரிவித்தார். அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்ற பின்னரே முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கைதானவரின் உருவ அமைப்பு, அவரின் பெயர் போன்ற விவரங்களை உறுதி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.