தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை : தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர், ஒரேநாளில் உரிய ஆவணங்களின் கொண்டுவரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சோதனை சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து வத்தலகுண்டு நோக்கி வந்த தனியார் நகை நிறுவன சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர், அதனை நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 6 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த அதிகரிகள், வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 39 தங்க நகை பெட்டிகளை பறிமுதல்  செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 18ஆம் தேதி முதல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 31 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகளின் வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கம் படையினர் பறிமுதல் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அபபோது, இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவரை சோதனை செய்ததில், அவரது பையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 3 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சிவன்மலை அருகே மதுரை மாவட்டத்தை சேர்ந்த 3 வியாபரிகளிடம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 450 ரூபாயும், அலம்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரூபாயும், மேலும் ஒருவரிடம் இருந்து 64 ஆயிரத்து 500 ரூபாயும் என 3 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

varient
Night
Day