டிசைன் டிசைனா யோசிக்கிறாங்கப்பா... 800 கோடியுடன் தம்பதி எஸ்கேப்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி நிறுவனம் சேமிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 800 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தமிழகம் முழுவதிலும் இருந்து தொடர் புகார்கள் வந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். எப்படி 800 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்...

திருச்சியைச் சேர்ந்தவர்கள் விஜயகிருஷ்ணன்-சாந்தினி தம்பதி. விஜயகிருஷ்ணன் வணிகன் என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து, கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் திருச்சியை தலைமையிடமாக கொண்டு எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மதுரை, கொடைக்கானல், விருதுநகர், தேனி, திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், தூத்துக்குடி, குலசேகரம், நாகர்கோவில், தக்கலை மற்றும் கேரளா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பகுதிகளில், எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி கிளை அலுவலகங்களை நிறுவி, பொதுமக்களிடம் வைப்பு நிதி மற்றும் வீட்டு சேமிப்பு திட்டத்தில் சுமார் 800 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் மோசடி குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரியா உத்தரவின் பேரில்,  ஏடிஜிபி பாலநாக தேவி மேற்பார்வையில், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி கல்யாண் தலைமையில் தமிழகம் முழுவதும் எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி கிளை அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காந்திநகர் மெயின் ரோட்டில் உள்ள எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டியில் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் விமலா தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனையிட்டனர்.

மேலும் அலுவலகத்திற்கு உள்ளே இருந்த ரகசிய அறை மற்றும் லாக்கர் பகுதிகளையும் உடைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் தமிழகம் மற்றும் கேரளா முழுவதும் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விஜயகிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளரும், எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டியின் தலைமை நிர்வாகியுமான விஜயகிருஷ்ணனும், அவரது மனைவி சாந்தினியும் துண்டை காணோம், துணியை காணோம் என தலைமறைவாகி உள்ளனர்.

800 ரூபாய் அளவிற்கு மோசடி செய்த தம்பதி, திடீரென தலைமறைவாகி இருப்பதும், பணம் கட்டியவர்களின் நிலை என்ன வென்று தெரியாமல் இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day