சிறைகளில் போதைப்பொருள் புழக்கம் - காவலர்கள் உதவியோடு படுஜோர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் சிறைக்காவலர்கள் ஆதரவோடு போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு பல லட்ச ரூபாய் மாதம்தோறும் கைமாறி வருவதாக கூறப்படும் நிலையில், விளம்பர திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் விற்பனை கொடி கட்டி பறக்கும் அவல நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் அறைக்குள் செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாகவும், இதனை சிறைத்துறை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் சிறையில் அதிகளவில் கஞ்சா புழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு, சிறைத்துறை அதிகாரிகள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், பாதுகாப்பு காவலர் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் சிறைக்காவலர்கள் ஆதரவோடு போதைப்பொருள் சப்ளை அதிகமாக நடந்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல லட்ச ரூபாய் மாதம்தோறும் கை மாறி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக சிறைக்கு வரும் வழக்கறிஞர்கள், சிலர் சட்ட விரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால், சிறையில் சட்டவிரோதமாக கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து, கடந்த ஒரு மாதத்தில் சென்னை நகரில் மட்டும் 4 போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வடசென்னை திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல, வெளியில் இருப்பதை விட சிறையில் தான் அதிகளவில் போதை பொருட்கள் விற்பனை இருந்து வருகிறது. சென்னையை அடுத்துள்ள புழல் சிறை போதைபொருட்களின் கூடாரமாகவே மாறி இருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு அறையிலும் கஞ்சா, பீடி, சிகரெட் என தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரிகளோ சோதனை என்ற பெயரில் பெயரளவிற்கு சோதனை நடத்தி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவறு செய்தவர்கள் சிறைக்கு சென்று தண்டனை அனுபவிப்பதை விட சிறைக்கு சென்று போதைப் பொருள் விற்பனையில் லட்சக்கணக்கில் பணம் பார்ப்பது தான் தற்போது சிறைகளில் லேட்டஸ்ட் டிரண்டாக இருந்து வருகிறது எனலாம். மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருட்களின் புழக்கத்தால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அதற்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதையெல்லாம் ஸ்டாலின் தலைமையிலான விளம்பர திமுக அரசு கண்டுகொள்ளாமல் போதை இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம் என்ற பெயரில் கண்துடைப்புக்காக உறுதி மொழி ஏற்று, போதை பொருட்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக இருப்பது தான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது.

Night
Day