செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பண மோசடி வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்தியாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜாமின் வழங்கிய உடன் அமைச்சரானது தொடர்பாக கடந்த முறை கேள்வி எழுப்பியதாகவும், அப்போது விளக்கம் பெற்று கூறுவதாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்த நிலையை மாற்றிக் கொண்டதாகவும் நீதிபதிகள் கடிந்துக்கொண்டனர். 

மேலும் செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை  பேர், என்பது குறித்து தமிழக அரசிடமிருந்து அறிய விரும்புவதாகவும்,  செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகளின் எண்ணிக்கையையும் அரசு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் சாட்சிகளாக உள்ளனர் என்றும், எத்தனை பொது ஊழியர்கள் சாட்சிகள் என்பது தொடர்பான விவரங்களையும் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள்  தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Night
Day