எழுத்தின் அளவு: அ+ அ- அ
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயஸ்ரீயின் பெற்றோர் தனுஷின் சகோதரரான இளைஞரை கடத்தியுள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர்.
இதனையடுத்து முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடத்தல் சம்பவத்திற்கும் ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் உள்நோக்கத்துடன் காவல்துறை வழக்கில் சேர்த்துள்ளதாக ஜெகன்மூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது ஒட்டு மொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன் மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெகன் மூர்த்திக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை இன்று மாலை நீதிபதி ஒத்தி வைத்தார்.