எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல்லடம் அருகே இளம்பெண் ஒருவர் மர்ம முறையில் உயிரிழந்துள்ள நிலையில், காதலன் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி தம்பதியரின் மகள் வித்யா. கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்துள்ளார். அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் வித்யாவின் வீட்டிற்கு வெண்மணி பெண் கேட்டு சென்றதாகவும், ஆனால் பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்த நிலையில், அவர் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வித்யாவின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வித்யா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.