எழுத்தின் அளவு: அ+ அ- அ
கவின் ஆணவக்கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் கேட்டு சிபிசிஐடி மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்துள்ளது.
கவின் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபால் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். அதில் இதுவரை 70 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். கொலை வழக்கு தொடர்பான 19 ஆவணங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு தடைய அறிவியல் ஆய்வகத்தின் பகுப்பாய்வு முடிவுகள் கொலை வழக்கு தொடர்பாக பெற வேண்டிய நிலை உள்ளதாகவும், இன்னும் பல பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணையை முடிக்க மேலும், ஒரு மாத கால அவகாசம் கேட்டு சிபிசிஐடி மனுதாக்கல் செய்துள்ளது.