எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லையில் பொறியாளர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக காதலி சுபாஷினி மற்றும் அவரது தாயை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் கவின் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சுர்ஜித் நடித்து காட்டினார்.
இந்நிலையில், காதலி சுபாஷினி, தாய் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். எத்தனை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்பது குறித்தும் எப்போது பெற்றோருக்கு தெரியவந்தது என்பது குறித்தும் சுபாஷினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதேபோன்று கொலை நடப்பதற்கு முன் பெற்றோரிடம் சுர்ஜித் தகவல் ஏதேனும் தெரிவித்தாரா என பல்வேறு கோணங்களில் இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கொலையான கவினின் செல்போனில் இருந்து முக்கிய தகவல்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செல்போனில் இருந்து கடந்த ஒரு மாதமாக இருவரும் உரையாடிய தகவல்கள் அனைத்தையும் மீட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.