எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஜித்குமார் லாக்கப் மரணத்தின் தாக்கம் மறைவதற்குள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் மீது காவலர்கள் கொடூர தாக்குதல் நடத்தும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 6-ம் தேதி நடந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த ஜெயபாலை துபாயில் வேலை இருப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளார். அவ்வாறு துபாய்க்கு சென்ற ஜெயபால், மூன்று மாதத்தில் கவலை கிடமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த விஜயிடம் ஜெயபாலின் மனைவி மலர் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. அப்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் மற்றும் அவரது சித்தப்பா மீது கச்சராபாளையம் காவல் நிலையத்தில் மலர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மலர் வழக்கு தொடர்ந்தார். அதன்படி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், எப்ஐஆர் மட்டும் பதிவு செய்து எவ்வித நடவடிக்கையும் காவலர்கள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மலரின் சகோதரி மகனான விக்கி என்பவர், தனது சித்தப்பாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று முறையிட்டதாக தெரிகிறது. அப்போது, சாலையில் இருந்து விக்கி மீது கொடூர தாக்குதல் நடத்தி தரதரவென காவல்நிலையத்திற்குள் காவலர்கள் இழுத்து சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
கடந்த மாதம் 6ம் தேதி நடந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் லாக்கப் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதனை தொடர்ந்து காவலர்கள் அட்டூழியத்தில் ஈடுபடும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது காவலர்கள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், காவலர் மணிகண்டனை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.