கடத்தப்பட்ட 4 வயது குழந்தை மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பட்டப் பகலில் வீடு புகுந்து கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்.

குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த வேணு - ஜனனி தம்பதியின் 4 வயது குழந்தை யோகேஷ் அங்குள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி பயின்று வருவதாக கூறப்படுகிறது.  வழக்கம்போல் இன்று பள்ளியில் இருந்து மகன் யோகேஷை தந்தை வேணு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்மநபர்கள் வேணு மீது மிளகாய் பொடி தூவி விட்டு யோகேஷை காரில் கடத்தி சென்றுள்ளனர். சுதாரித்து கொண்டு காரின் பின்னால் ஓடியபடியே மகனை மீட்க தந்தை வேணு போராடியநிலையில், கீழே விழுந்து காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது குறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காரின் பதிவெண் போலி என்பதை கண்டறிந்தனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக இதே பகுதியில் நோட்டமிட்டு சிறுவனை கடத்தியதும் முதற்பட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் 6 தனிப்படைகள் அமைத்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், போலீசார் தங்களை தேடுகிறார் என அறிந்த கடத்தல் கும்பல், சிறுவனை மாதனூர் அருகே சாலையோரத்தில் விட்டு விட்டு தப்பியுள்ளது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவன் யோகேஷை  மீட்டனர். தொடர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day