எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
மூங்கில் தொழுவு ஊராட்சி சிக்கனூத்து கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், தந்தை மகன்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் தகராறை தடுக்க சென்றுள்ளனர். அப்போது, தந்தை மூர்த்தி, மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோர் தாக்கியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழந்தார். கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க்ரிஷ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய 3 பேரை தேடி வந்தனர்.
இதனிடையே தப்பிய 3 பேரில் தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன் ஆகிய இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மகனான மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.