இளைஞரை தாக்கியது ஏன் - உயர்நீதிமன்ற கிளை கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்புவனம் போலீசாரால் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை தீவிரவாதியை போல் அடித்து கொடுமைப்படுத்தியதாக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் ஒன்பதரை சவரன் நகை திருடுபோன வழக்கில், அந்த கோவிலில் காவலளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் அராஜக போக்கால் நிகழ்ந்த லாக்கப் மரணத்தை கண்டித்து அவரது உறவினர்கள் பலவித போராட்டங்களை முன்னெடுத்தனர். 

இந்நிலையில் கோவில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய கோரி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியா கிளாட் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது என நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், 24 லாக் அப் மரணங்கள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் அரசு வழக்கறிஞரிடம்  கேள்வி எழுப்பினர். மேலும் அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா? அவரை தூக்கி கொண்டு போய் அடித்து கொலை செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர். 

ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை, அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க அரசு தரப்பில் காலக அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Night
Day