எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை சூளைமேடு பகுதியில் இரவில் குடித்துவிட்டு வந்து துன்புறுத்திய மகனை தாய் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் பாதை பகுதியை சேர்ந்த பிரமிளா என்பவரின் கணவர் ராமசந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மூத்த மகனுக்கு திருமணமாகி தனியாக வசித்து வந்த நிலையில், பிரமிளாவின் 3வது மகன் முகில் என்பவர் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. நாள்தோறும் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வரும் அவர், தாயிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு மீண்டும் தாயுக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தூங்கச் சென்ற மகன் முகிலின் கழுத்தை கத்தியால் வெட்டி தாய் பிரமிளா கொலை செய்துள்ளார். பின்னர் வடபழநி காவல்நிலையத்திற்கு சென்ற பிரமிளா விவரத்தைக் கூறி சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முகிலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.