ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை... தமிழக காவலர்கள் அத்துமீறல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே ஆந்திர பெண்ணை தமிழக காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் புறவழிச் சாலையில் நேற்று இரவு ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் வந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள், அந்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அதில் இருந்த லட்சுமி என்ற இளம்பெண்ணை மட்டும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டு வாகனத்தை அனுப்பியுள்ளனர்.

பின்னர், அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள், புறவழிச் சாலையோரம் இளம் பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இன்று அதிகாலை அலங்கோலமாக நின்றிருந்த இளம் பெண்ணை பார்த்த ஏந்தல் கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இளம் பெண்ணை காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி இரு காவலர்களை கைது செய்த போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

Night
Day