ஆந்திராவில் தாபாவில் வைத்து விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞரை 
விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற போலீசார், வழியில் அவர் வேலை பார்த்த தாபாவில் விசாரணை நடத்தினர். 

திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டியில் கடந்த 12ம் தேதி 10 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார், கடந்த 14 நாட்களாக குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.  

இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே நிறத்திலான டீ-சர்ட்டை அணிந்துக் கொண்டு, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் சுற்றித்திரிவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், அந்த இளைஞரை பிடித்து கவரப்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த இளைஞர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், சூலூர்பேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததும், கஞ்சா போதைக்கு அடிமையானதால் முறையாக பணிக்கு செல்லாமல் விடுமுறை நாட்களில் தமிழக எல்லைப் பகுதிகளில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. சில நேரங்களில் கஞ்சா போதையில் பெண்களிடம் அத்துமீறியதும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று அந்த இளைஞர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியானதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இளைஞரின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்ததாகவும் தெரிகிறது. விசாரணையின் போது இளைஞர் ரத்த வாந்தி எடுத்ததாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், சுமார் 15 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். முன்னதாக இளைஞருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day