ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களின் அஞ்சலிக்கு பிறகு தகனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரான கவின், கடந்த 27ஆம் தேதி நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இளம்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கொலையாளியின் தந்தையான காவல் சார்பு உதவியாளரும் கைது செய்யப்பட, முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த தாயாரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே கவினின் கொலையில் தனது பெற்றோருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். 

இதனை தொடர்ந்து, 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கவினின் உடலை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்தனர். அங்கு வைத்து கவினின் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, கவினின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஊருக்குள் பேரணியாக கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல், அஞ்சலிக்காக வீட்டின் முன் வைக்கப்பட்டது. கவினின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

கவினின் உடலுக்கு உற்றார் உறவினர்கள் பொதுமக்கள், பெற்றோர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.


varient
Night
Day