அறுபதிலும் ஆசை வரும்... வந்தா நகை, பணம் போயிடும்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற 60 வயது முதியவரிடம் மேட்ரிமோனியில் அறிமுகமான பெண், தனது சகோதரியுடன் சேர்ந்து, 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அபகரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை திருவொற்றியூரில் உள்ள மேற்கு மாடவீதி தெருவை சேர்ந்தவர் 60 வயதான ஆனந்தன். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால் தனிமையில் வாழ்ந்து வந்த அவர், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இதற்காக திருமண தகவல் மையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரன்களை பார்த்து வந்தார்...

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சியை சேர்ந்த சித்ரா என்ற பெண் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகி உள்ளார். நாளடைவில், இருவரும் செல்போன் மூலம் உரையாடி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த சித்ரா, உங்களை பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தனது சகோதரி முத்துலட்சுமியுடன் ஆனந்தனை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சகோதரிகள் இருவரும் ஆனந்தனின் வீட்டிலேயே அன்று இரவு தங்கி உள்ளனர். காலையில் எழுந்த ஆனந்தனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சித்ரா மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயுடன் எஸ்கேப் ஆனது தெரியவந்தது. 

இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட திருவொற்றியூர் போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மோசடி பேர்வழிகளான சித்ரா மற்றும் முத்துலட்சுமி ஆகிய இருவரும், மதுரை கீரத்துறை பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், சித்ரா மற்றும் முத்துலட்சுமியை கைது செய்தனர்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள திருமண தகவல் மையங்கள் மூலம் வரன் பார்க்கும் நபர்களை, குறிப்பாக தனிமையில் வாழும் முதியவர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து உள்ளது. ஆகவே, இவ்வாறு மோசடி செய்யும் பேர்வழிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திருமண தகவல் மையங்கள் தங்களிடம் பதிவு செய்யும் நபர்கள் குறித்து உண்மையான தகவல்களை பெறவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day