எழுத்தின் அளவு: அ+ அ- அ
சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குன்றத்தூர் அபிராமி தொடர்ந்த மேல்முறையீட்டுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே வசித்து வந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமி. அவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்களுக்கு இடையூராக இருந்த கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பிய நிலையில், 2 குழந்தைகளும் பரிதபமாக உயிரிழந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கு அதற்கு உடந்தையாக இருந்த சுந்தரமுக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி குன்றத்தூர் அபிராமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.