எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறைவில்லாத ஆயுள் தண்டனை ஆறுதல் அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். தனது 64 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன், ஞானசேகரன் விவகாரத்தில் தமிழக அரசு கிரெடிட் எடுத்துக் கொள்வதின் மையக்கரு என்ன? அந்த சார் யார்? என்று கேள்வி எழுப்பினார். அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் என்றும் முதல்வர் இதை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தீர்ப்பை வரவேற்றுள்ளார். தீர்ப்பு குறித்து பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக கூறினார்.