"மாங்கல்ய பூஜை செய்தால் விசேஷம்..." - நகைகளுடன் எஸ்கேப்-ஆன போலி சாமியார் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன்பு மாங்கல்ய பூஜை செய்து தருகிறேன் என பெண் பக்தர்களை ஏமாற்றி நம்ப வைத்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அபகரித்து சென்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். தேவஸ்தான ஊழியர் என்று கூறி நகைகளை அபகரித்த நபர் சிக்கியது எப்படி? இது குறித்தான செய்தி தொகுப்பை விரிவாக பார்க்கலாம்...

தேவஸ்தான ஊழியர் என்று கூறி பெண் பக்தர்களிடம் தங்க ஆபரணங்களை அபகரித்த கொண்டு எஸ்கேப் ஆனா போலி சாமியார் சங்கரின் சிசிடிவி காட்சி தான் இவை.

மதுரையை சேர்ந்த சங்கர் ராவ் என்பவர் முருகன் நாகராஜ் என்ற பெயருடன் திருப்பதி மலையில் சுற்றித்திரிந்து உள்ளார். மாங்கல்ய பூஜை செய்கிறேன் என்று கூறி பல்வேறு ஊர்களில் பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் திருப்பதி மலைக்கு சென்று குறுக்கு வழியில் மோசடியில் இறங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி, திருப்பதி மலைக்கு சாமி தரிசனத்திற்காக வரும் அப்பாவி பெண்களை நோட்டமிட்ட போலி சாமியார் சங்கர் ராவ், அவர்களிடம் சென்று தன்னை தேவஸ்தான ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். ஏழுமலையான் கோவில் முன் மாங்கல்ய பூஜை செய்து கொண்டால் உங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என பேச்சு கொடுத்து ஏமாற்றி உள்ளார் போலி சாமியார் சங்கர் ராவ்.

போலி சாமியாரின் பேச்சுக்கு மயங்கிய அப்பாவி பெண்கள் தங்களது கணவன்மார்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என நம்பி போலி சாமியாருடன் வளையல் கடைக்கு சென்றுள்ளனர். அங்கு பெண்களுக்கு கண்ணாடி வளையல்களை வாங்கி கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து தங்க மாங்கல்யம் உள்ளிட்ட நகைகளை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகி உள்ளார் சங்கர் ராவ். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து, கோயில் திருக்குளத்தில் குளித்துவிட்டு ஈர துணியுடன் நேராக கோயிலுக்கு முன்பு வந்து சேருங்கள், அங்கு உங்களுக்கு மாங்கல்ய பூஜை நடத்தி வைக்கிறேன் என நயமாக கூறியுள்ளார் போலி சாமியார் சங்கர் ராவ். போலி சாமியாரின் பேச்சை அப்படியே நம்பிய பெண்கள், திருக்குளத்தில் குளித்துவிட்டு கோவில் முன் வந்து நீண்ட நேரம் சங்கர் ராவுக்காக காத்திருந்தனர். 

ஆனால், ஈர உடை காய்ந்ததே தவிர சங்கர் ராவ் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. அதன்பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பாவி பெண்கள், திருமலை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் வரிசையில் விசாரணை நடத்திய போலீசாருக்கு பெரும் டூவிஸ்ட் இருந்தது. அதில், போலி சாமியார் சங்கர் ராவ் மாங்கல்ய பூஜை என்ற பெயரில் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி சாமியார் சங்கர் ராவை வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர். தொடர் சம்பவங்கள் காரணமாக விசாரணை வேகப்படுத்திய போலீசார் மதுரைக்கு சென்று காவல்துறையிடம் குற்றவாளி பதிவேடுகளை ஆய்வு செய்து சங்கர் ராவை அடையாளம் கண்டனர். தொடர்ந்து சங்கர் ராவ்வின் நடமாட்டத்தை தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணித்து வந்த போலீசார், திருப்பதிக்கு வந்த சங்கர் ராவை கையும் களவுமாக கைது செய்தனர். பக்தர்கள் பறிகொடுத்த 132 கிராம் தங்க ஆபரணங்களை கைப்பற்றி விசாரணைக்கு பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.

Night
Day