பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மருத்துவம், இலக்கியம், அமைதி உள்ளிட்டத் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் மோக்கீர், பீட்டர் ஹோவிட் ஆகிய இருவருக்கும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிலிப்பே அகியோன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் ஆகிய புதுமைகள் அடங்கிய பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆய்வுக்காக இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.