எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலத்தில் 'கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்து குடித்த 22 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கான 'புரோப்பிலின் கிளைக்கால்' பயன்படுத்தியதால், 'டை எத்திலீன் கிளைக்கால்' அளவு மிகவும் அதிகரித்து, குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருந்து நிறுவன உரிமையாளரான சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் நடத்தினர். தொடர்ந்து, கோடம்பாக்கத்தில் உள்ள அந்த நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், அந்த நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளான, தேனாம்பேட்டையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குனர் கார்த்திகேயன் வீட்டிலும், திருவான்மியூரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் தீபா ஜோசப் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில், காஞ்சிபுரம் முதுநிலை மருந்து ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.