சீன பொருட்களுக்கு 100 சதவீத வரி - அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனையடுத்து, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் அமெரிக்கா அறிவித்தது.

இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. அதேவேளை, கூடுதல் வரிவிதிப்பு நிறுத்தத்திற்கான 90 நாட்கள் அவகாசம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவடைந்ததையடுத்து கால அவகாசம் கூடுதலாக நவம்பர் 10 தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Night
Day