அமைதிக்கான நோபல் பரிசு மச்சாடோவுக்கு அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியானா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்தை தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி 2025ம் ஆண்டு அமைதிக்கான நேபால் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியானா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே வெளிப்படையாக தமது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகில் 7 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு வகையிலும் அவர் வலியுறுத்தியபடி இருந்தார். இதில் உச்சபட்சமாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான முதற் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி, அமைதியின் அதிபர் என்று டிரம்பை குறிப்பிட்டு வெள்ளை மாளிகை பதிவு ஒன்று நேற்று வெளியிட்டிருந்தது. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததான் மூலம் டிரம்பின் கனவு தகர்ந்துள்ளது.

Night
Day