எழுத்தின் அளவு: அ+ அ- அ
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவருடைய இல்லத்திற்கு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு கடந்த மாதம் 24ம் தேதி மாற்றி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டு விட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவார்கள் என வாதிட்டார்.
இதனை தொடர்ந்து மனு மீது பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யும்போது கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன என்றும், அதேவேளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடரும் என்றும் உத்தரவிட்டனர்.