எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரானின் ராணுவ விமான நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈரானுக்கு உதவ தயார் என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 13ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கியதை தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளதால் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களுடைய ராணுவம் 6 ஈரானிய ராணுவ விமான நிலையங்களை இன்று தாக்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற முக்கிய இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஈரான் நேற்று ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் உருக்குலைந்த நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனிடையே, தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் இன்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. போரை வேண்டுமானால் சூதாட்டக்காரரான டிரம்ப் துவங்கி இருக்கலாம், ஆனால் அதை முடிக்கப் போவது தாங்கள்தான் என்று, ஈரான் ராணுவ சென்ட்ரல் கமாண்ட் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈரானுக்கு உதவ தயார் என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானின் தேவையை பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா அளிக்கத் தயார் என மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- ஈரான் சண்டையில் சமரசம் செய்து வைக்கவும் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.