எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 50 சதவீத வரிவிதிப்பு சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த வரிவிதிப்பின் காரணமாக இந்திய தொழில்துறையில் கடுமையான பாதிப்பை சந்திக்க இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்த சூழலில், 7ஆண்டுகளுக்கு பிறகு சீனாவிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என விமர்சித்துள்ளார். இந்தியாவிடம் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலான பொருட்களையே விற்பனை செய்வதாக சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், அமெரிக்காவிடம் இந்தியா அதிகளவிலான பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் அமெரிக்கா தான் என சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப்
இந்தியா மற்ற நாடுகளுக்கு இல்லாத அளவிற்கு அமெரிக்காவிடம் இருந்து அதிகமான வரியை வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வரியை இந்தியா ஏற்கனவே குறைத்திருக்க வேண்டும், ஆனால் கால தாமதமாகவே வரி குறைக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.