எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அதே பகுதியில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது 140 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.7 ரிக்டர் அளவில் பதிவானது.
நிலநடுக்கத்தால் குனார் மாகாணத்தில் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜலாலாபாத்தும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர், டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.