எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் மகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் வளாகத்திற்கு வந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உரையாடினார். அப்போது பிரதமர் மோடியை விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் கைகளை கோர்த்தபடி மாநாட்டிற்கு அரங்கிற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த பாகிஸ்தான் பிரதமரை, இருவரும் கண்டுகொள்ளாமல் சென்றனர். தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடியும், விளாடிமிர் புதினும் சந்தித்தனர். மூன்று தலைவர்களும் கைகுலுக்கி, உரையாடலில் ஈடுபட்டது, அவர்களுக்கு இடையே உள்ள தோழமையை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, தியான்ஜினில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக பதிவிட்டுள்ளார். அதிபர் புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் 3 தலைவர்களின் இந்த சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.