எழுத்தின் அளவு: அ+ அ- அ
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் அந்நாட்டை அவர் பகிரங்கமாக சாடினார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு உறுப்பினர் அமர்வில், பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவை அடிப்படையான அம்சங்கள் என்று அவர் கூறினார். ஆனால் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் இதற்கு பெரிய தடையாக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு என்பது ஒவ்வொரு நாட்டின் உரிமை என்றும், பயங்கரவாதம் என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளுக்கும் ஒரு பெரிய சவால் என்றும் கூறினார்.
கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் சுமைகளை இந்தியா தாங்கி வருவதாக கூறிய பிரதமர் மோடி, பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் இந்தியா கண்டதாக கூறினார். இந்த தாக்குதல் ஒவ்வொரு நாட்டிற்கும் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட நபருக்கும் ஒரு வெளிப்படையான சவாலாக இருந்ததாகக் கூறிய அவர், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் அந்நாட்டை பகிரங்கமாக சாடினார். பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஒருமனதாக எதிர்க்க வேண்டும் என்றும், மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை எதிர்ப்பது அனைவரின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எந்த இரட்டை நிலைப்பாடும் பொறுத்துக் கொள்ளப்படாது என்பதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வலுவான பிணைப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான கதவுகளையும் திறக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். இன்று, சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றி இந்தியா முன்னேறி வருவதாக தெரிவித்த அவர், ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற முயற்சித்து வருவதாகவும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க வருமாறு மாநாட்டில் பங்கேற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.