எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் பலர் சில மாதங்களே ஆட்சி செய்ததாகவும், ஆனால் தனது நண்பர் மோடி அங்கு பல ஆண்டுகளாக ஆட்சி செய்வதாகவும் குறிப்பிட்டார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் தனக்கு மகிழ்ச்சியில்லை எனக்கூறிய ட்ரம்ப், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் இருக்காது என பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்துள்ளதாகவும், ஆனால் இதனை உடனடியாக அவரால் செய்ய முடியாது என்றார். நாம், உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த டிரம்ப், இரண்டு தலைவர்களிடம் நிறைய வெறுப்பு இருக்கிறது என்றார். போரை நிறுத்த ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது மிகவும் எளிதாகிவிடும் எனக்கூறிய டிரம்ப், போர் முடிந்ததும் அவர்கள் ரஷ்யாவுடனே வர்த்தகத்தை தொடரட்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 200 சதவீத வரி விதிப்பேன் என மிரட்டியவுடன் இந்தியாவும்- பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதித்ததாக அதிபர் ட்ரம்ப் பேசினார். எட்டு மாதங்களில் எட்டு போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கிடைத்ததா என்று ஆதங்கத்தை கொட்டிய ட்ரம்ப், ஆனால் அடுத்த ஆண்டு கிடைக்கும் என நினைக்கிறேன் என்றார்.