எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் அம்ரீத் பாரத்தை திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக ராஜஸ்தான் சென்ற பிரதமர் மோடி, தேஷ்நோக்கில் உள்ள கர்னி மாதா கோவிலில் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தேஷ்நோக் ரயில் நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, பிகானீர் - மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ரயில் நிலையத்தில் நின்றிருந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாற்றினார்.
இதையடுத்து பிகானீரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
தெற்கு ரயில்வேயில் சென்னை பரங்கிமலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.
புதிதாக மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடை மேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.