வெளிநாடுகளுக்குச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்கள் பட்டியல் வெளியீடு - மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 22ல் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பய்ஙகரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டு, தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்தநிலையில், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக பல நாடுகளின் உயரதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் சந்திப்புக்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அந்த வரிசையில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு குறித்து விளக்கி ஆதரவு திரட்ட மத்திய அரசு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்ப உள்ளது. அதற்கான முழுமையான பட்டியலையும் இன்று வெளியிட்டுள்ளது. 7 குழுக்களில் 59 அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 31 பேர் தேசிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 20 பேர், மற்றவர்கள் அரசியல் வல்லுநர்கள் ஆவர். குறிப்பிடத்தக்க வகையில் ஏழு குழுக்களிலும் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் வல்லுநர்களிடையே குறைந்தது ஒரு இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எந்தெந்த குழு எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறது என்ற பட்டியலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 32 நாடுகளுக்கு இந்திய அனைத்துக் கட்சிக் குழுக்கள் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளைப் பின்பற்றும் வகையில் பாகிஸ்தானும் பல்வேறு நாடுகளுக்கு தங்கள் குழுவை அனுப்பி வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் பாகிஸ்தானின் தரப்பு நியாயத்தை முன்வைக்க ஒரு குழுவை வழிநடத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதில் தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day