போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் டிரம்ப்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு தொலைபேசி அழைப்பு கூட நடைபெறவில்லை - ஜெய்சங்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கும்- பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு தொலைபேசி அழைப்பு கூட நடைபெறவில்லை என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை பாகிஸ்தான் நிரந்தரமாக கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயாது என்றும் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதப் பிரச்சினையை உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் உறுதியாக வைப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த மாத 9ம் தேதி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளது என எச்சரித்தாக கூறினார்.  அப்படியொரு தாக்குதல் நடந்தால் அதற்கு இந்தியா வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தாகவும் ஜெய்சங்கர் கூறினார். 

அதன்படி பயங்கரவாத தாக்குலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு அமைப்புகளை வெற்றிகரமாக வீழ்த்தியது என்றும், இதற்கு பிறகு பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை விரும்புவதாக சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியதாக ஜெய்சங்கர் கூறினார்.

ஆனால் எந்த மத்தியஸ்தத்திற்கும் தயாராக இல்லை என்றும் போர் நிறுத்தம் இருதரப்பு ரீதியாக மட்டுமே இருக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறிய அவர், ஏப்ரல் 22 முதல் ஜூன் 16 வரை, அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு தொலைபேசி அழைப்பு கூட நடைபெறவில்லை என்றும் கூறினார்.

Night
Day