எழுத்தின் அளவு: அ+ அ- அ
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு தயாரிப்பு ஆலை மற்றும் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தீசா நகருக்கு அருகில் அமைந்துள்ள அந்த ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், மேற்கூரை மற்றும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்க கூடியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக பனஸ்கந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய்ராஜ் மக்வானா தெரிவித்துள்ளார்.
ஆலையில் இருந்த பாய்லர் வெடித்ததால் இந்த வெடி மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயின் வேகமும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். தலைமறைவான பட்டாசு ஆலை மற்றும் கிடங்கின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.