டார்ச்சர் செய்யும் பேராசிரியர்... குமுறும் உதவி பேராசிரியை..!

எழுத்தின் அளவு: அ+ அ-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக உதவி பேராசிரியை குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியையின் குற்றச்சாட்டுகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

நெல்லை மாவட்டம் பேட்டை அருகே அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் இதே பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிக்கும் போது வேதியியல் துறையில் பணியாற்றி வரும் கண்ணன் என்ற பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய துணைவேந்தராக இருந்த பிச்சுமணி என்பவரிடம் புகார் அளித்துள்ளார். அதைதொடர்ந்து டவுன் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். 

தற்போது பிஎச்.டி. படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வான நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இருந்தும் பேராசிரியர் கண்ணன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவாறே இருந்து வந்துள்ளார். மேலும் பாலியல் புகாரளித்ததை மனதில் வைத்துக் கொண்டு, அந்த உதவி பேராசிரியை மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாநில மகளிர் நல ஆணையம், தேசிய மகளிர் நல ஆணையத்தில் புகார் அளித்த பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உதவி பேராசிரியை தெரிவித்துள்ளார். அதேபோல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனவேதனையோடு தெரிவித்துள்ளார். பேராசிரியர் கண்ணன் பணம், அதிகார பலம் படைத்தவராக திகழ்வதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைவரும் தயங்குவதாக தெரிவித்துள்ள உதவி பேராசிரியை, தற்போது தமிழக முதலமைச்சருக்கு இணையதளம் மூலமாக தனது ஆடியோவை பதிவு செய்து புகாராக அனுப்பி உள்ளார். 

இந்நிலையில் உதவி பேராசிரியையின் பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி உள்விவகார குழு அமைத்து விசாரிக்க துணை வேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் என்பவர், தனது உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வீடியோ பதிவு மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். இந்த புகாரிலாவது அரசு மற்றும் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

Night
Day