எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்த மண்ணுலகை விட்டு சென்றாலும், இசை ரூபத்தில் வாழ்ந்து வரும் பின்னணி பாடகி சுவர்ணலதா பற்றி பலரும் அறிந்திடாத சில அரிய தகவல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஸ்வரங்களில் இளவரசிக்கு நடந்தது என்ன? பார்க்கலாம் விரிவாக..!
ஒரு ஆர்மோனியக் கலைஞனுக்கும், இசைக் காதலிக்கும் பிறந்த குழந்தை தான் ஸ்வர்ணலதா. ஸ்வர்ணலதாவின் சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள பாலகாடு. அப்பா செருக்குட்டி ஆர்மோனியக் கலைஞர். அம்மா கல்யாணிக்கு இசை மீது அதீத காதல். தியாகராஜ பாகவதர், டி.எம்.எஸ் பாடல்கள் என எப்போதும் வீட்டில் தமிழ் பாடல் தான் ஒலித்துக்கொண்டிருக்குமாம். பாலக்காடு தமிழக எல்லையில் இருப்பதாக தமிழை சரளமாக பேச தெரிந்த ஸ்வர்ணலதா-வின் குடும்பத்தினர் தமிழும் எங்களுக்கு இன்னொரு தாய்மொழி என சொல்வதுண்டு. கேரளாவில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்து, தமிழ் இசையுலகில் நுழையும் கனவோடு சென்னை வந்தடைந்தார் ஸ்வர்ணலதா. 3 வயதிலேயே, கர்னாடக மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களைத் தன் சகோதரியிடம் கற்றுக்கொண்ட ஸ்வர்ணலதா, தந்தையிடம் ஆர்மோனியம் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு கனவுக்கும், நிஜமாகும் நாளொன்று இருக்கிறது. அப்படி ஒருநாள், மெல்லிசை மன்னரிடமிருந்து ஓர் அழைப்பு. தன் 14-வது வயதில், `நீதிக்கு தண்டனை' எனும் படத்தில் `சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்கிற பாடலைப் பாடினார் ஸ்வர்ணலதா.மெல்லிசை மன்னரைத் தொடர்ந்து இசைஞானியின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது. `குரு சிஷ்யன்' படத்தின் `உத்தமபுத்திரி நானு', இளையராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடிய முதல் பாடல்.
பிறகு, `சத்ரியன்' படத்தில் `மாலையில் யாரோ மனதோடு பேச' என்கிற குரல், உண்மையிலேயே செவிகளுக்குள் மார்கழி வாடையை மெதுவாக வீசியது.`என் ராசாவின் மனசிலே' படத்தின் `குயில்பாட்டு வந்ததென்ன' பாடல், குயிலின் இசையைவிட இனிமையானது. `மெலடி பாடல்கள் என்றால், ஸ்வர்ணலதா அடித்து நொறுக்குவார்' என்கிற நேரத்தில்தான் அந்தவொரு பாடல் வந்தது.`கேப்டன் பிரபாகரன்' படத்தில் வரும் `ஆட்டமா தேரோட்டமா' ரசிகர்களை இன்றைக்கு VIBE MODE-க்கு அழைத்துச்செல்லும் ரகம்.
மெல்லிசை மன்னர் ஏற்றிவைத்த சிறு தீபம், இசைஞானியின் இசையில் பெரும் ஜுவாலையாக வளர்ந்து, இசைப்புயலின் இசையில் பட்டொளி வீசிப் பரவியது. தன்னுடைய வாழ்க்கையில் இசைக்காகவே வாழ்ந்து... குடும்பம், குழந்தை, என எதையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்... இருந்த தேவதையான சுவர்ணலதாவை, ரசிகர்கள் பலரும் இசை பொக்கிஷம் என்றும் ஹம்மிங் குயின் என்றும் வர்ணிப்பது உண்டு.இரண்டு பாடல்களை சினிமாவில் பாடிவிட்டாலே... தலைக்கனத்து இருக்கும் சிலர் மத்தியில், சுவர்ணலதா வித்தியாசமானவர். ரசிகர்கள் மத்தியில் ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசாதவர்.
இந்தநிலையில் தான் ஸ்வர்ணலதாவின் குடும்பத்தினருக்கு பேரிடியாய் விழுந்தது அந்த தகவல். ILD எனப்படும் Interstitial lung disease அதாவது நுரையீரலில் ஏற்படும் அரியவகை பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்கள் ஸ்வர்ணலதாவை பரிசோதித்த மருத்துவர்கள். நுரையீரல் பாதிக்கப்பட்டால் மூச்சுவிடுவதே சிரமம் என்ற நிலையில் அச்சூழலிலும் மூச்சை பிடித்துக்கொண்டு பாட முயற்சித்திருக்கிறார் ஸ்வர்ணலதா.
பல பரிசோதனைகள் மருத்துவமனைகள் என அலைந்த போதும் அரியவகை நோய் என்பதால் காப்பாற்றவே முடியாது என மருத்துவர்கள் கைவிரித்ததாக கூறப்படுகிறது. தனது அற்புதமான குரலால் எண்ணற்ற பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களை உருகவைத்தவரால் கடைசியில் பேசக்கூட முடியாமல் போனது தான் சோகமே. 23 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 7,000 மேற்பட்ட, பல மொழி பாடல்களை பாடியுள்ள சுவர்ணலதா...2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் அந்த காற்றோடு கரைந்து போனார் சுவர்ணலதா. தன்னுடைய 14 வயதில் பாட ஆரம்பித்த இந்த சின்னச்சிறு குயில்... தன்னுடைய வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளாமல், வெறும் 37 வயதிலேயே உயிரிழந்தது. இப்படி குடும்பத்தினராலும் தமிழ் ரசிகர்களாலும் மறக்கமே முடியாத ஸ்வரங்களின் இளவரசி ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் ஏப்ரல் 29.