எழுத்தின் அளவு: அ+ அ- அ
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என சட்டப்பேரவையில் வைத்தே சவால் விட்ட அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகைக்கு திமுக அமைச்சர் துரைமுருகன் கொடுத்த பதிலடி தான் திமுகவுக்கே சூனியமாக மாறியிருக்கிறது..! அப்படி என்ன பதிலளித்தார் துரைமுருகன் விரிவாக பார்க்கலாம்..
2021 சட்டமன்ற தேர்தலின் போது நீட் தேர்வை வைத்து அற்ப அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தது திமுக. மருத்துவ கனவோடு இருந்த மாணவி அனிதாவின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடிய திமுக, மருத்துவர் கனவை சுமக்கும் மாணவர்களின் உணர்ச்சிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் சதுரங்கம் ஆடியது. அரசியல் லாபத்துக்காக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற போலி பிம்பத்தை உருவாக்கிய திமுக அரசு, மாணவர்களை ஏமாற்றியதன் விளைவுக்கு சாட்சியாக இருப்பது, நீட் தேர்வால் நீடிக்கும் மாணவர்களின் தற்கொலைகளே.
இப்படி நீட் தேர்வை தனது தேர்தல் அரசியல் அஸ்திரமாகவே பயன்படுத்தி வரும் திமுக-வின் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதை முற்றிலும் மறைத்து எதிர்கட்சிகள் மீது பழியை போட்டு மாணவர்களின் மருத்துவ கனவை காக்க வந்த தேவ தூதர்கள் போல தங்களை முன்னிறுத்திக்கொண்டு நாடகமாடி வரும் திமுகவின் முகத்திரையை அக்கட்சி அமைச்சரே கிழித்தெறிந்திருப்பது தான் உச்சகட்ட சம்பவமே..!
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை நிரூபித்தால், பதவியை ராஜினாமா செய்ய தயார் என காங்கிரஸ் மாநில தலைவரும், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப் பெருந்தகை சட்டப்பேரவையில் கொக்கரித்து பகிரங்க சவால் விடுத்தார். உடனே எழுந்த திமுகவின் சர்ச்சை மன்னன் அமைச்சர் துரைமுருகன் அப்படியானால் முதலில் ராஜினாமா செய்யுங்கள் என கூற அவையே அரண்டு போனது.
கடந்த 2010ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான் நீட் தேர்வுக்கான விதையை விதைத்தது என்பது தான் மறுக்கமுடியாத உண்மை என்பதே அரசியல் அறிந்தவர்களின் கூற்றாக உள்ளது. அப்போது காங்கிரஸ் அரசுடன் கைகோர்த்து ஆட்சியில் இருந்தது வேறுயாரும் இல்லை தற்போது நீட் ரத்து நாடகத்தை அரங்கேற்றி வரும் இதே திமுக தான்.
அப்போது பெரும்பான்மை பலம் இல்லாததால் திமுகவின் தயவிலேயே மத்தியில் ஆட்சி செய்து வந்தது காங்கிரஸ். காங்கிரஸின் குடுமி திமுகவின் கையில் இருந்த நிலையில் அப்போதே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இன்று மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது. ஆனால் மகளுக்கு எம்.பி.சீட் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என காங்கிரசுக்கு அழுத்தம் கொடுத்து டெல்லிக்கு நடையாய் நடந்த கருணாநிதியோ தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி மூச்சு கூட விடாமல் மவுனம் காத்தது தான் அழிக்க முடியாத வரலாறு என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகவும் உள்ளது.
இப்படி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை மாறிமாறி வஞ்சித்ததன் வரலாற்றை தூக்கி சுமந்துக்கொண்டிருக்கும் திமுகவும் காங்கிரசும் சட்டப்பேரவையில் தங்கள் வாயாலேயே சூனியம் வைத்துக்கொண்டது தான் அவை அரண்டு போனதற்கு காரணம். காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை நிரூபிக்க முடியுமா என்ற செல்வப்பெருந்தகையின் சவாலுக்கு, முதலில் ராஜினாமா செய்யுங்கள் என துரைமுருகன் பதிலளித்தது, ஆம் காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் கொண்டுவரப்பட்டது என்பதை அப்பட்டமாக உலகுக்கு நிரூபிக்கும் வகையில் இருந்தது.
இதில் காங்கிரஸை பழி சொல்கிறேன் என்ற பேரில் உண்மையை உடைத்துகூறி திமுகவுக்கு தன் வாயாலேயே துரைமுருகன் சூனியம் வைத்தது தான் அல்டிமேட் ரகம். அதாவது நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டதன் பின்னணியில் காங்கிரஸ் தான் இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட துரைமுருகன், அதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த திமுக தான் என்பதையும் தன் வாயாலேயே வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். இதன்மூலம் நீட் தேர்வை வைத்து தேர்தல் அரசியல் செய்து வந்த திமுகவின் உண்மை முகம் அம்பலப்பட்டுள்ளது.