எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வெவ்வேறு விவகாரங்களுக்கான 2 மத்திய அமைச்சரவை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் "அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை" கூட்டத்தில் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எப்போதும் காங்கிரஸ் கட்சி எதிராக இருந்தது என்றும், 2010ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள முடிவு செய்த பின்பு, அது சமூக- பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பாக எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதனால், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். அரசியலமைப்பு சட்டம் 246, 69-ன் கீழ் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் ஏழாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது மத்திய அரசின் பணி என்றும் கூறினார்.
ஒரு சில மாநிலங்களில் எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்புகள், முழுமையாக அரசியல் ஆதாயத்திற்காக வெளிப்படைத் தன்மை இல்லாமல் எடுக்கப்பட்டவை எனக் குறிப்பிட்டார். மேலும் அந்த கணக்கெடுப்புகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது என்றும், ஆனால் மத்திய அரசு மேற்கொள்ளும் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.