எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெற்ற தாயை மனசாட்சியே இல்லாமல் மகன்கள் நடுரோட்டில் விட்டுச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஆதரவில்லாமல் தவிக்கும் தாயை ஏற்றுக் கொள்ள கோரி, மூதாட்டியுடன் அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரை கவனிக்காத மகன்களால், நடுதெருவிற்கு வந்துள்ள மூதாட்டியின் அவல நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள். இவருக்கு முருகேசன் மற்றும் கோவிந்தன் என இரு மகன்களும், வள்ளியம்மா என்ற ஒரு மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் மூதாட்டியின் கணவர் இறந்து விட்டதால் பாப்பாத்தியம்மாள் பூத்துப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக தன்னை கவனித்துக் கொள்ள முடியாமல் பெற்ற மகனையும், மகளையும் நாடிச் சென்றுள்ளார்.
இரு மகன்கள் மற்றும் மகள் வீட்டிலும் சிறிது காலத்தை கழித்து வந்த நிலையில், கடந்த மாதம் இளைய மகனான கோவிந்தராஜ் மூதாட்டியை கவனிக்க விரும்பாமல் பொட்டி படுக்கையுடன் மூதாட்டியை அழைத்து வந்து பூத்துப்பட்டி கிராம சாலையோரம் இறக்கி விட்டு சென்றுள்ளார். இதனால், பதறிப்போன மூதாட்டி பாப்பாத்தியம்மாள் நடுவீதியில் செய்வதறியாது திகைத்து நின்றார். மூதாட்டியை மீட்ட கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் என்பவர் கடந்த ஒரு மாதமாக அடைக்கலம் தந்து உணவு வழங்கி பராமரித்து வந்துள்ளார்.
தற்போது வயது மூப்பின் காரணமாக பெற்ற பிள்ளைகளுடன் சேர வேண்டும் என மூதாட்டி விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூதாட்டியை பிள்ளைகளிடம் சேர்க்க வலியுறுத்தி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் கடந்த ஒரு மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டி, மூதாட்டியை பெற்ற பிள்ளைகளுடன் சேர்க்கக்கோரி முக்கிய சாலையில் கட்டில் போட்டு மூதாட்டியுடன் ஊர் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை பிள்ளைகளுடன் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். பெற்ற தாயை பாரமாக கருதி நடு ரோட்டில் மகன்கள் விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.