எழுத்தின் அளவு: அ+ அ- அ
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
கொல்கத்தாவின் புர்ரா பஜாரின் மெச்சுவா பழச் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அனைத்து பகுதிகளிலும் பற்றி கொளுந்து விட்டு எரிந்த நிலையில், உள்ளே இருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் தீயில் சிக்கி அலறி துடித்துள்ளனர். அப்போது தீயில் இருந்து தப்பிக்க முயன்ற ஹோட்டல் ஊழியர் ஒருவர் கூரையிலிருந்து குதித்து இறந்தார். இதையடுத்து பயங்கர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழு உறுப்பினர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, ஹோட்டலின் வெவ்வேறு அறைகளில் இருந்து 3 தமிழர்கள் உட்பட 15 உடல்கள் கருகிய நிலையல் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து உயிர் பிழைப்பதற்காக ஜன்னல்கள் மற்றும் கூரை வழியாக பொதுமக்கள் குதித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இதனிடையே கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, அவரது மனைவி, 10 வயது மகள் தியா, 3 வயது மகன் ரிதன் மற்றும் மாமனாருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சம்பவம் நடந்த ஹோட்டலில் தங்கியிருந்தபோது, பிரபுவும், அவரது மனைவியும் உணவு வாங்க வெளியே சென்றனர்.அப்போது, ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அவரது 2 குழந்தைகளும், மாமனாரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.