எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்கால சிறப்பு வகுப்பு என பெயர் வைத்துக் கொண்டு, பிள்ளைகளை கண்காணிக்காமல், அம்போ என விட்டுச் சென்றதன் விளைவால் ஏற்பட்ட துயரத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மதுரை கேகே நகர் பகுதியில் இயங்கி வரக்கூடிய ஸ்ரீ மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியை திவ்யா என்பவர் நடத்தி வருகிறார். இந்த கோடைகால பயிற்சி முகாமில் 6 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலக்கூடிய மற்ற பள்ளி மழலையர்கள் இந்த கோடைகால சிறப்பு வகுப்பில் பயின்று வருகின்றனர்.
அவ்வாறு சிறப்பு வகுப்பிற்கு வந்த மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் என்பவரது நான்கு வயது மகள் ஆருத்ரா ஸ்ரீ, மழலையர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு மூடப்படாமல் இருந்த சுமார் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற குழந்தைகள் அங்கிருந்த பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு ஓடி வந்த பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரம் போராடி தொட்டிக்குள் கிடந்த சிறுமியை மீட்டு பள்ளி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தை அதிக அளவு தண்ணீரை குடித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பம் தொடர்பாக, அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யாராஜேஸ் மற்றும் பள்ளி பணியாளர்கள் உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அலட்சியத்துடன் செயல்பட்டதாக பள்ளி தாளாளர் மற்றும் உதவியார் வைரமணி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தை தண்ணி தொட்டியில் விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகதான் கூறினார்கள். குழந்தை உயிரிழந்ததை கூறவில்லை என குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் தந்தை அமுதன், பள்ளி தரப்பிலிருந்து தற்போது வரை யாரும் தன்னிடம் பேசவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், உடனடியாக தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். பின்னர் இச்சம்பவம் நடந்த பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆய்வு மேற்கொண்டு பள்ளியை பூட்டி சீல் வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி அலட்சியமாக செயல்பட்டதாலேயே சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் சிறுமி உயிர் இழந்த விவகாரத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக துணை ஆணையர் அனிதா தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் 180 க்கு மேற்பட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்படுவதாகவும், மாவட்டத்தில் 25 மழலையர் பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், மதுரை மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர்கள் நலச்சங்க தலைவர் கதிரவன் தெரிவித்தார்.
தனியார் பள்ளி அலட்சியத்தால் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த துயர சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் மழலையர் பள்ளி மற்றும் கோடைகால சிறப்பு பயிற்சி அளிக்கும் பள்ளிகளில் அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ள மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அனுமதியின்றி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.