தேர்தல் நன்கொடை பத்திரங்களின் வரிசை எண்களையும் வெளியிட எஸ்.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு, எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து, கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்காமல் தொடர்ந்து கால அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ வங்கியை உச்சநீதிமன்றம் கடிந்து கொண்ட நிலையில், ஒரு வழியாக கடந்த வாரம் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி சமர்ப்பித்தது.

இந்த நிலையில், தேர்தல் பத்திர விவரங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேர்தல் பத்திர எண் விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை என எஸ்.பி.ஐ வங்கிக்கு கேள்வி எழுப்பினர். 

ஒவ்வொரு முறையும் அனைத்தையும் வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் கூற வேண்டும் என எஸ்பிஐ வங்கி நினைக்கிறதா எனவும், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் எஸ்.பி.ஐ வங்கிக்கு என்ன தயக்கம் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கவும், பின்னர் அது தொடர்பாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவும் எஸ்பிஐ வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எஸ்.பி.ஐ தாக்கல் செய்த தேர்தல் பத்திர விவரங்களை உடனடியாக தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனிடையே 2018-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி வரை விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Night
Day