எழுத்தின் அளவு: அ+ அ- அ
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று வழக்கம் போல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிமன்ற அறையில் இருந்த நபர் ஒருவர், முழக்கமிட்டபடி, தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவலர்கள் உடனடியாக அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர்.
நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற்றப்படும் போது அந்த நபர், சனாதன தர்மத்திற்கு அவமரியாதை செய்வதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று முழக்கமிட்டதாக அங்கிருந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். வழக்கறிஞர் அங்கி அணிந்திருந்த அந்த நபர், தலைமை நீதிபதி மீது காலணி அல்லது காகித சுருளை வீச முயன்றதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்ட போதும் பொறுமையுடன் இருந்த தலைமை நீதிபதி கவாய், எந்த தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களை தொடருமாறு கேட்டு கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், தாக்குதல் முயற்சி சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.