ஜம்மு-காஷ்மீரில் இயல்பை தாண்டிய கனமழை - மக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

டெல்லியில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் யமுனா நதி அபாய அளவைத் தாண்டி பாய்ந்தோடுகிறது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யமுனை நதி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும், தாழ்வான பகுதிகளில் சிக்கி உள்ள மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். யமுனை நதியின் அபாய அளவை கருத்தில் கொண்டு கண்காணிப்பு பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஜெளும் நதியின் நீர்மட்டம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் படகு சவாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இன்றி சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

பஞ்சாபின் அமிர்தசரஸில் பெய்து வரும் மழையால் அஜ்னலா பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கி உள்ள மழைநீரில் பயணிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஹரியானாவின் அம்பாலாவில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும், மழையால் தத்தளித்து வரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். பன்மடங்கு தேங்கிய மழைநீரில் கடும் சிரமத்திற்கு மத்தியில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். 

Night
Day